தங்க அரிசி [கோல்டன் ரைஸ்]: ஆசியாவில் பரவலாகக் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடு நோய்களைத் தடுக்க போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்க, குறிப்பாக விற்றமின் A குறைபாடு இரவுக்குருடு/குருட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பாதிப்புக்களிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற இந்த அரிசியை அறிமுகம் செய்திருக்கின்றார்கள்.
விற்றமின் A குறைபாடு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் ஹீமாடோபாய்சிஸை பலவீனப்படுத்துகின்றது. மேலும் வழக்கமான வறண்ட கண் பாதிப்பு, தோல் சிவத்தல், தோல் வறண்டு செதில்களாகவும் நுரையீரல், குடல் மற்றும் சிறுநீர் பாதையின் சளி சவ்வுகள் தடிமனாகவும் கடினமாகவும் மாறும். [சுவாசம் மற்றும் மலசலம் கழிப்பதை கடினமாக்கும்.]
ஹீமாடோபாய்சிஸ் என்பது: இரத்தத்தை உருவாக்கும் செயல்முறையாகும். இது முக்கியமாக எலும்பு மஜ்ஜையில் [ஸ்டெம் செல்கள்] முதிர்ந்த இரத்த அணுக்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கின்றது. இதிலிருந்து தெரிகின்றது விற்றமின் A எவ்வளவு முக்கியம் என்று.
இந்த விற்றமின் குறைபாட்டிற்கு மற்றும் வேறு சில காரணிகள் ரெட்டினோல் [விற்றமின் A] விழித்திரைக்கு உரிய விற்றமின் இதனுடைய குறைபாடு போதிய அளவு உட்கொள்ளாமை , கொழுப்பை உறிஞ்சுதல் மற்றும் கல்லீரல் பாதிப்பாலும் ஏற்படுகின்றது. அதாவது விற்றமின் A குறைபாடு உணவுகள் மட்டுமின்றி உடல்ரீதியான உறிஞ்சுதல் கோளாறுகளினாலும் ஏற்படுகின்றது.
விற்றமின் A, இயற்கையாக கிடைப்பதில்லை அதனுடைய முன்னோடி பீட்டா கரோட்டின் வடிவத்தில் இருக்கின்றது இதை கல்லீரல் மற்றும் குடல்-வாழ்-நல்ல-பாக்டீரியாக்கள் விற்றமின் A வடிவமடைய வைக்கின்றது.
வயது வந்தவரின் தினசரி விற்றமின் A தேவையை பூர்த்தி செய்ய இரண்டு கேரட் போதுமானது.
இருப்பினும், அவை கொழுப்புடன் சாப்பிட வேண்டும். [ பொதுவாக விற்றமின்கள் கொழுப்பு /எண்ணைய் [நல்லெண்ணெய்] [விற்றமின் E] நிறைந்த உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இல்லாது போனால் அது வீணாகிவிடும். விற்றமின் A அத்துனை கொழுப்பிலும் கரையக்கூடிய இரசாயன கலவை கொண்டது.
சரி இருக்கட்டும் தங்க அரிசிக்கும் விற்றமின் A க்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. அரிசியை முக்கிய உணவாக உட்கொள்ளும் ஆசிய மக்களின் விற்றமின் A குறைபாட்டினை சரி செய்வதற்காக,
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச விஞ்ஞானிகள் குழுமம் ஒரு சிறப்பு வகை அரிசியை உருவாக்க மரபணு பொறியியலைப் பயன்படுத்தி இந்த தங்க அரிசியை சாகுபடி செய்தார்கள்.
தங்க அரிசி [கோல்டன் ரைஸ்] அதன் பெயர் சேமிக்கப்பட்ட பீட்டா கரோட்டின் என்பதிலிருந்து பெறப்பட்டது, இது அரிசி தானியங்களுக்கு மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தை அளிக்கின்றது. அரிசி தானியத்தில் ß-கரோட்டின் உற்பத்தி செய்ய, மரபணு பொறியியல் உதவியுடன் அரிசியில் ஒரு சோள மரபணு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதான் தங்க அரிசியின் ரகசியம்.
நீங்கள் என்னிடத்தில் ஒரு கேள்வியை கேட்க ஆர்வமாக இருக்கலாம். மரபணு மாற்றப்பட்ட தங்க அரிசியை சாப்பிடலாமா, அதனால் பாதிப்புக்கள் ஏதும் வராதா ? நீங்கள் பயமின்றி தாராளமாக சாப்பிடலாம். ஏனென்றால் இன்று சாப்பிடும் அத்துனை உணவுகளும் ஏதோ ஒரு வகையில் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ காட்டு இனங்களிலிருந்து மரபணு மாற்றப்பட்டு உருவானவை. இந்த உணவுகள் ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் மற்றும்படி நச்சு கிடையாது.
உலக சுகாதார அமைப்பின் [WHO] கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 125,000 முதல் 250,000 குழந்தைகள் இறக்கின்றனர்.குறிப்பாக ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற வளரும் நாடுகளில் உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கை வழங்கும் விற்றமின் A இல்லாததால் குழந்தைகள் மோசமான பார்வைக் கோளாறு பின்னர் அவர்கள் பார்வையற்றவர்களாக மாறுகிறார்கள்,
ஊட்டச்சத்து குறைபாட்டினால் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதி பேர்களுக்கு மேல் இறந்துவிடுகின்றார்கள்.
மரபணு பொறியியல் சாகுபடி உணவுகள் உண்மையில் வரமா அல்லது சாபமா, இந்த உணவுகள் உலகளாவிய உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்துமா? அல்லது பட்டினி சாவிலிருந்து காப்பாற்றும் மனிதாபிமான கடமையா..? இந்த கேள்விக்கான பதிலை அனுபவரீதியாக பதில் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, நூற்றுக்கும் மேற்பட்ட நோபல் பரிசு வென்றவர்கள் விவசாயத்தில் உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
வேகமாக வளர்ந்து வரும் உலக மக்கள்தொகையில் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பை இது வழங்கும் என்று நம்பினார்கள். அதனுடைய ஒரு செயல்வடிவம் தான் இந்த கோல்டன் ரைஸ்.
அரிசியிலுள்ள விற்றமின்/கனிமசத்துக்கள்: முழு தானிய கைக்குத்து அரிசியில் கணிசமாக அதிக விற்றமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன,
நாங்கள் சாப்பிடும் அரிசியில் விற்றமின் B1, B2 மற்றும் E உள்ளன, இவை முக்கியமாக வெள்ளித் தோலில் [தவிடு] காணப்படுகின்றன. உள் தானியத்தில் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்களை வழங்குகின்றது.
அரிசியில், விற்றமின் A, விற்றமின் C மற்றும் விற்றமின் B12, விற்றமின் D3, அயோடின்-I ஒரு துளியளவும் கிடையாது. அதனால்தான் நீங்கள் விற்றமின் A வழங்கும் தங்க அரிசியை சமையல் செய்து சாப்பிடலாம்.
பொதுவாக விற்றமின்கள் அதிக வெப்பத்தில் சிதைந்து போகக்கூடியது,விற்றமின் B1 [தியாமின்] விற்றமின் B5 [பாந்தோத்தேனிக் அமிலம்] மற்றும் விற்றமின் C போன்றவை வெப்ப உணர்திறன் கொண்ட விற்றமின்கள் ஆகும்.
குறிப்பாக 100 டிகிரிக்கு மேல் இந்த விற்றமின்கள் 50 சதவிகிதம் வரை இழந்து போகின்றது. இதனால் தான் இயற்கை மிக முக்கியமான விற்றமின்களை பச்சையாக சாப்பிடும் பழங்கள், சலட், நெல்லிக்காய், கேரட் உணவுகளில் வைத்திருக்கின்றது.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023