புதன், 13 அக்டோபர், 2021

நியூரோடெர்மாடிடிஸ்,(நரம்புத் தோல் அழற்சி) அரிக்கும் தோலழற்சி: விடாது அரிக்கும் இந்த சரும கோளாறு பரம்பரையாக வருகின்ற ஒரு குறைபாடு, இதற்கும் நோயெதிர்ப்பு அமைப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கின்றது, அலர்ஜி/ஒவ்வாமை நோய்க்கு எப்படி நோயெதிர்ப்பு சக்தி செயல்படுகின்றதோ அதேபோலத்தான் இதற்கும் செயல்படுகின்றது. இருப்பினும் இது அலர்ஜி நோய் கிடையாது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பல நோய்களின் முகப்புரையாக நோயெதிர்ப்பு அமைப்பு இருக்கின்றது. சர்க்கரை நோய் வகை-1 தொடங்கி சொறி சிரங்கு, ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி வரைக்கும் 80க்கும் மேற்பட்ட சுய-உடல்-தாக்கி நோய்கள் இருக்கின்றது அதாவது நோயெதிர்ப்பு சக்தியே நேரடி காரணியாக இருக்கின்றது.

காய்ந்து உலர்ந்து போன சருமம் இதை தொடக்கி வைக்கும் முதன்மை காரணியாக செயல்படுகின்றது, பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு பரம்பரையாக பிறப்பிலிருந்தே இந்த சரும குறைபாடு வருகின்றது. பின்னால் வளர்ந்து பூப்பெய்த பின்னர் இந்த சரும கோளாறு தானாகவே இல்லாது போகின்றது மற்றும் சிலருக்கு தொடர்கின்றது.

தாய் தந்தையினருக்கு இருந்தால் பிறப்பிலிருந்தே பிள்ளைகளுக்கும் ஏற்படும். சின்ன வயதில் சொறி சிரங்கு, எக்ஸிமா, நியூரோடெர்மாடிடிஸ் அரிக்கும் தோலழற்சியால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் பிற்காலத்தில் ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி மற்றும் சர்க்கரைநோயினால் அவதிப்படுவார்களாக இருப்பார்கள்.

எங்களுடைய தோல் எப்படி செயல்படுகின்றது, நியூரோடெர்மாடிடிஸ் நோயாளிகளுக்கு தோலில் ஏதாவது மாற்றம் உள்ளதா, எங்களுடைய தோல் மூன்று அடுக்குகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது மேலடுக்கு சருமம், இடைச்சருமம் மற்றும் அடிச்சருமம் இதில் மேலடுக்கு சருமம் அல்லது வெளித்தோல் லிப்பிட், சரும கொழுப்புகளால் நிறைந்தது.

இந்த லிப்பிட், சரும கொழுப்பு பரம்பரையாகவோ அல்லது வேறு காரணங்களின் நிமித்தம் அழிந்து போனால் எடுத்துக்காட்டாக: தினமும் வெந்நீர் குளியல், அடிக்கடி சவர்க்காரம் போட்டு கழுவுதல், அதிகளவில் ஒப்பனைபொருள்களின் பயன்பாடு, சர்க்கரைநோய், அதிகளவு மதுபானங்களினால் இந்த லிப்பிட், சரும கொழுப்பு அழிக்கப்படுகின்றது அல்லது குறைவுபடுகின்றது.

பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூச்சை காளான் மற்றும் சூடு குளிர் போன்ற அந்நிய ஊடுருவலிருந்து உடலை பாதுகாக்கும் அரணாக இருக்கும் இந்த லிப்பிட், சரும கொழுப்பு இல்லாது இருப்பதினால் நோய்க்கிருமிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடும்.

சைட்டோகைன் இந்த இடத்தில்தான் நோயெதிர்ப்பு சக்தி அதனது செயல்பாட்டினை முடுக்கிவிடுகின்றது. அரிப்பு ஏற்பட்டு சொறிந்து சொறிந்து சிவந்து புண்ணான இடத்தில் வீக்கத்துடன் அழற்சியை ஏற்படுத்துகின்றது. மனித நோயெதிர்ப்பு அமைப்பு உடலில் காயங்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிராக வினைபுரிகின்றது.

நோயெதிர்ப்பு அமைப்பு வெளியிடும் சைட்டோகைன் இன்டர்லூகின்-6 (IL-6) போன்ற தூது பொருட்களால் உடலில் வீக்கம் தூண்டப்படுகின்றது. இந்த பெப்டைட் ஹார்மோன் உயிரணுக்களில் உள்ள சிறப்பு ஏற்பி மூலக்கூறுகளுடன் பிணைக்கப்பட்டு அழற்சியை ஊக்குவிக்கின்றது.

எங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, காய்ச்சல் வந்தால் வைரஸ் தூண்டுதலாக இருந்தாலும் காய்ச்சலை தோற்றுவிப்பது எங்களுடைய நோயெதிர்ப்பு அமைப்பு, இருமல் தும்மல் அரிப்பு எரிச்சல் வீக்கம், அழற்சி வாந்தி பேதி போன்ற பல உபாதைகளுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு வெளியிடும் தூது பொருட்கள்தான் காரணியாக இருக்கின்றது.

இரத்தத்தில் சைட்டோகைனின் அதிகப்படியான அளவு இதயம், நுரையீரல் மற்றும் இரத்த நாளங்களை சேதப்படுத்தும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கும் இதனுடைய பாதிப்பு அதிகமாக இருக்கும்.

புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் இதனுடைய வெளிப்பாடு இருக்கும். காரணம் இல்லாமல் உடலில் ஏற்படும் கடுமையான அரிப்பு புற்றுநோய் அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும் அரிப்புக்கு காரணியான ஹிஸ்ட்டமின் வெளிப்பாடு தொடர்ந்து விடாது அரிக்கின்றது. இதனுடைய தொடராக ஏற்படும் ஆஸ்துமா, தும்மல் அலர்ஜி நிரந்தரமாக இந்த நோயாளியை பீடிக்கின்றது.

அதிகளவு ஒப்பனை பொருட்களை பயன்படுத்துவது அத்தியாவசியமான சரும கொழுப்பு மெழுகு சுரப்பிகளை அழித்துவிடுகின்றது. சருமத்திற்கு கொழுப்பு எவ்வளவு முக்கியமானது அதை மருந்து மாத்திரைகள் ஒப்பனை பொருட்கள் மூலம் அழிப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

நியூரோடெர்மாடிடிஸ் அரிக்கும் தோலழற்சியை குணப்படுத்தமுடியும், அதற்கான காரணிகளை களைந்து, தோல் தொற்று நோய்கள் ஏற்படாமல் நல்ல பராமரிப்பு எண்ணைய், களிம்பு தடவுதல் மூலம் கட்டுப்படுத்தினால் சிறிதுகாலத்தில் முற்றுலுமாக இல்லாது ஒழிக்கமுடியும். கவனமின்றி இருந்தால் இது தொடக்கி வைக்கும் ஆஸ்துமா, தும்மல் அலர்ஜியை குணமாக்கமுடியாமல் போகும் என்பதுதான் இதனுடைய உச்சம்.

எங்களுடைய உடல் நோயெதிர்ப்பு என்னும் ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது”

சைட்டோகைன்கள் இன்டர்லூகின்-6, (IL-6 ) உயர்வுக்கு  நியூரோடெர்மாடிடிஸ் ,தோல் அழற்சியை தவிர்த்து புற்றுநோய், கொரோனா வைரஸ் காரணியாக இருக்கின்றது இவைகளை எதிர்த்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் T-செல்கள் போராடுகின்றது.

புற்றுநோய் செல்கள் பல்வேறு மூலக்கூறு தந்திரங்கள்  மூலம்  நோயெதிர்ப்பின் சாதாரண தாக்குதல் முயற்சிகளை தவிர்க்கின்றன. இதனால், T- செல்கள் மந்தமாகவே இருக்கும் இவைகள்  தங்கள் எதிரி புற்றுநோய் செல்கள் என தெரிந்ததும் தாக்குதலை ஆரம்பிக்கின்றது.

T செல்களின் தீவிர தாக்குதல் பல பக்க விளைவுகளைக் கொண்டுள்ளன T-செல்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன, இருப்பினும் சில சமயங்களில் அவை கட்டுப்பாட்டை இழக்கின்றன அவற்றின் அதிகப்படியான செயல்பாடு நோயாளியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கூடிய காய்ச்சல், இதய படபடப்பு, மூச்சுத் திணறல்  ஏற்படும்.. புற்றுநோய் செல்களுக்கு எதிராக CAR -T செல் சிகிச்சை செய்யப்படுகின்றது.

இன்டர்லூகின் -6, கோவிட்-19 அதிகரிக்க செய்கின்றது இதன் நிமித்தம் நுரையீரல் அல்வியோலி  வீக்கம் ஏற்படுகின்றது

சைட்டோகைன்  உற்பத்தி செய்யும்  செல்கள். - மேக்ரோபேஜ் - T-லிம்போசைட் - மாஸ்ட் செல் - எண்டோடெலியல் செல்கள் ( இரத்த தமனி செல்கள்)- ஃபைப்ரோபிளாஸ்ட் (தோல் செல்கள்) கிரானுலோசைட்- பாசோபிலிக் கிரானுலோசைட் (பாசோபில்ஸ்) - நியூட்ரோபில் கிரானுலோசைட் (நியூட்ரோபில்ஸ் - ஈசினோபில் கிரானுலோசைட்  (ஈசினோபில்ஸ்.)

ஆரோக்கியமான தோல். லிப்பிட் சரும கொழுப்பு  இங்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றது இதன் நிமித்தம் நோய்கிருமி அந்நிய ஊடுருவலை தடுக்கின்றது.

நியூரோடெர்மாடிடிஸ்  (நரம்புத் தோல் அழற்சி) லிப்பிட் சரும கொழுப்பு, ஈரப்பதம் இல்லாதது. அந்நிய ஊடுருவலை  தடுக்கும் ஆற்றலை இழக்கின்றது இதன் நிமித்தம் நோய்கிருமிகள், பாக்டீரியாக்கள் ஒவ்வாமை பொருட்களின் ஊடுருவல் அரிப்புக்கு வழிவகை செய்கிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக